Monday, December 21, 2009

ரேணிகுண்டா


இந்த படத்தோட Trailer பார்த்தபோதே தெரிஞ்சது இது "சுப்ரமணியபுரம்" படத்தோட வெற்றியின் பாதிப்பில் எடுக்கப்பட்ட முயற்சின்னு. Trailerல் வந்த வசனங்கள் எல்லாம் "போவோம்ல... வருவோம்ல..." என்றே இருந்தது. சரிதான் இந்த படத்துக்கு போனா மதுரை பாஷை பேசியே கொன்றுவாங்க்யன்னு கொஞ்சம் Alert ஆனேன். ஆனா என் விதி... இந்த "சுஹாசினி பேசும் படம்" நிகழ்ச்சிய பாத்தேன். அதுல அது சொல்லுச்சு.. "நான் 20 வருஷமா பாத்த தமிழ் சினிமாக்கள்ல இந்த மாதிரி Visuals எந்த படத்துலயுமே இல்லை"னு. சரி அப்புடி என்னதான் Visuals எடுத்துருக்காங்க்யனு பாக்க திருவான்மியூர் தியாகராஜா Theatreக்கு போனேன். நான் போய் Theatreல Ticket வாங்கி Seat தேடி உக்காரரதுக்குலே படத்துல 5 நிமிஷம் போய்டுச்சு. சரி படம் நல்லாருந்தா இன்னொரு வாட்டி சத்யம்ல பாத்துக்கலாம்னு மனச தேத்திக்கிட்டேன். ஆனா அதுக்கான அவசியமே இல்லாம போச்சு. இன்னோரு அரை மணி நேரம் கழிச்சு வந்திருக்கலாமோனு தோண ஆரம்பிச்சுடுச்சு படம் பாக்க ஆரம்பிச்சுவுடனே.

ஒரு சோகமான VoiceOver கேட்டுச்சு. இந்த படத்துக்கும் எனக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்ல.. நான் சும்மா வேடிக்கை பாக்க வந்தேங்குற மாதிரி மூஞ்சிய வச்சுட்டு ஒருத்தன் ஒரு செவுத்து மேல உக்காந்திருந்தான். அவன சுத்தியே Camera Focus பண்ணிட்டு இருந்துச்சு. அப்பறம் தான் தெரிஞ்சுது அவன் தான் படத்துல Main Characterனு. 7G Rainbow Colony Hero ரவிகிருஷ்ணாக்கு சரியான Competitor உருவாகிட்டான்னு அப்பவே நெனச்சுக்கிட்டேன். ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த பையனின் அப்பா அம்மாவை ஒரு சப்பை Reasonக்காக ஒருத்தன் காரை ஏத்தி கொன்னுற்றான். அதுக்கு பழி வாங்குறதுக்காக இவன் ஒரு மொக்க கத்திய தூக்கிட்டு போய் அவன்ட மாட்டிக்கிறான். அவன் இவன தூக்கி Jailல போட்டுற்றான். அங்க இவன Trouserஅ கழட்டி நாயடி பேயடி அடிக்கிறாங்க்ய. TCC[Tamil Cinema Code]420ஆம் விதிப்படி இப்ப இவன காப்பாத்த ஒருத்தன் வரனுமேனு யோசிச்சுக்கிட்டிருந்தேன். ஓருத்தனுக்கு நாலு பேரா கெலம்பி வந்தாங்க்ய. நாலு பேரும் சிலபல கொலைகள் பண்ணிட்டு Jailக்கு வந்திருக்குறதா SubTitle போட்டாங்க்ய. யாரும் ஜாமீன் எடுக்க வராததாலும், Jailக்குள் Bore அடித்ததாலும் அவங்க அஞ்சு பேரும் Escape ஆகலாம்னு முடிவு பண்றாங்க. அடுத்த Scene, Jailலருந்து Escape ஆகி ஜாலியா புரோட்டா சாப்பிடுறாங்க்ய. சாப்டதுக்கு அப்பறம் என்ன பண்ணலாம்னு Room போட்டு யோசிச்சதுல, அந்த பையனோட அப்பாம்மாவ கொன்ன வில்லன போடலாம்னு முடிவு பண்றாங்க. போட்டும் தல்றாங்க. மும்பைல இந்த மாதிரி போட்டு தல்றவங்களுக்கு நல்ல மவுசுன்னு கேள்விப்பட்டு அஞ்சு பேரும் மும்பை Trainல ஏறி பாதி வழில ரேணிகுண்டால எறங்கிடுறாங்க. ரேணிகுண்டாவில் இந்த 5 பேர் செய்யும் கொலைகளும், ஒரு Love Trackம், இறுதியில் Encounterல் அனைவரும் போடப்படுவதும் மீதி கதை.

படம் முழுக்க யாராவது யாரையாவது போட்டுக்கொண்டே இருக்குறாங்க்ய. நம்மலயும் யாராவது போட்றுவாங்க்யலோ ஒரு பயத்துலயே படம் பாக்கவேண்டியிருக்கு. கொலை செய்வது எப்படின்னு ஒரு Breif Tutorial பாத்த Effect கெடைச்சுது, நாலஞ்சு Illustrated Examplesஓட. இது பத்தாதுன்னு ஒரு Love Track வேற. இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு வச்ச directorஅ கட்டாயம் பாராட்டணும். Heroineஆ வர பொண்ணு கைல ஒரு குச்சிய குடுத்துவுட்டு இங்கிட்டும் அங்கிட்டும் நாலஞ்சுவாட்டி நடக்கவுட்றுக்காங்க்ய. அதப்பாத்து உணர்ச்சிவசப்படர Hero அது பின்னாலயே போய் ஒரு பாட்டும் பாடிப்புடுறான். இதப்பாத்த அவளோட அக்கா, இவனவிட ஒரு நல்ல பையன்(!) நம்ம தங்கச்சிக்கு கிடைக்கமாட்டான்னு முடிவு பண்ணி அவனக்கூப்புட்டு என் தங்கச்சிய கூட்டிட்டு போய் எங்கயாவது நல்லாருன்னு சொல்றா. நானும் படம் சுபமா முடியப்போகுதுன்னு கொஞ்சம் தெம்பானேன். அங்கதான் நம்ம Director ஒரு Twist வச்சாரு. ஒரு கொலை பண்ற Assignment வருது. எவ்வளவோ பண்ணிட்டோம்...இதப்பண்ணமாட்டோமான்னு... அந்த கொலைய பண்ணிட்டு மும்பை போய் Settle ஆகலாம்னு எல்லாரும் சேந்து Plan பண்றாங்க. நம்ம எதிர்பார்த்த மாதிரியே அந்த Assignment Fail ஆகி 5 பேரயும் Police Encounterல போட்டுத்தள்ளுது. Heroineஅ தனியா Dealல விட்டுற்றாங்க்ய. அனேகமா இதே கதையோட வர 84வது தமிழ் படம் இதுன்னு நெனைக்கிறேன். ஆனாலும் Directorஅ பாராட்டணும். பழைய கதையா இருந்தாலும் லைட்டா பட்டி பாத்து டிங்கரிங்க் வேலையெல்லாம் பண்ணி படத்த Release பண்ணிருக்காரு.


ரேணிகுண்டா - கொலைவாள்.

Saturday, December 6, 2008

பூ


நினைவு தெரிந்த நாள் முதல் தன் மாமன் மகனை நினைத்தே வாழும் ஒரு பெண், தன் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லும் "வெயிலோடு போய்" என்ற சிறுகதையை மூலமாகக் கொண்டு சசி அவர்கள் இயக்கியிருக்கும் படம் "பூ". ஒரு இலக்கியப் படைப்பை எவ்வாறு மக்களைக் கவரும் விதத்தில் ஒரு திரைப்படமாக உருமாற்றம் செய்வது என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் இப்படம். ஹாலிவுட்டில் இத்தகைய முயற்சிகள் மிக அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமிழில் தங்கன் பச்சான் போன்ற வெகு சில இயக்குனர்களே இந்த முயற்சியை எடுத்துள்ளார்கள். இந்த முயற்சியை வெகு நேர்த்தியாகக் கையாண்டு, 75 வருட தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக ஒரு சிறந்த திரைப்படத்தைத் தந்துள்ளார் சசி.

படத்திற்கு ஆணிவேராக அமைந்திருப்பது தெளிவான எளிமையான முழுமையான திரைக்கதை. அழகிய கையெழுத்தில் அமைந்த தலைப்பில் துவங்கி கவித்துவமான முடிவு வரையிலான இரண்டரை மணி நேரத்தில் மாரி என்ற பெண்ணின் கனவுகளையும் ஆசைகளையும் சுகதுக்கங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது திரைக்கதை. படத்தின் மற்றொரு பலம் ஒளிப்பதிவு. மாரி வேலை பார்க்கும் வெடி தொழிற்சாலை, பேனாக்காரர் வேலை பார்க்கும் எண்ணெய் ஆலை, இரட்டை பனைமரம், மாரி மற்றும் தங்கராசுவின் வீடுகள் போன்றவற்றை நாமே நேரில் காண்பது போல யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நம்மையும் கதை நடக்கும் ராஜபாளையம் சுற்று வட்டார கிராமத்து மக்களாகவே ஆகி விட செய்வது ஒளிப்பதிவாளரின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. படத்தில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நிஜ உலக மனிதர்களாகவே வாழ்ந்திருப்பது இதற்கெல்லாம் மகுடம் சேர்ப்பது போல் அமைந்துள்ளது. இவர்கள் அனைவரின் உழைப்பையும் ஒருங்கிணைத்து ஒரு சிறந்த படைப்பை தந்துள்ள சசி தமிழ் சினிமாவை வேறொரு உயரத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.

படத்தின் ஜீவநாடியாக விளங்குவது மாரி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் பார்வதி. தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம். கண்ணசைவில் ஆயிரமாயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப்பெண் பார்த்த மாத்திரத்தில் நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார். இவரின் நடிப்பிற்கு சரியான தீனியாக அமைந்திருக்கிறது மாரி கதாபாத்திரம். மலையாள வாடை இன்றி விருதுநகர் தமிழ் பேசி நடித்திருப்பது இவரை தேசிய விருது வரை எடுத்து செல்லக்கூடும். செம்மண் பரப்பில் செருப்பின்றி நடப்பதிலாகட்டும், கள்ளிபழம் பறிக்க நடுநிசியில் செல்வதிலாகட்டும், நாணத்தில் முகம் சிவப்பதிலாகட்டும், ஏமாற்றத்தில் அழுவதிலாகட்டும் அசல் கிராமத்துப் பெண்ணாக மனதைக் கொள்ளை கொள்கிறார்.

சிறுசுகள் ஆட்டம் போடும் "ச்சு ச்சூ மாரி", மாரியின் காத்திருப்பை சொல்லும் "ஆவாரம்பூ", மாரியின் அறிமுகப்பாடலான "ஏதோ பண்ணுற மாரி" மற்றும் "மாமன் எங்கிருக்காக" என அனைத்துப் பாடல்களிலும் பின்னி எடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் S.S. குமரன். குறிப்பாக "ஆவாரம்பூ" பாடல் மாரியின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நன்றாகவும் காட்சியமைக்கப் பட்டுள்ளது.
சிறந்த படத்திற்கான தேசிய விருது பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இந்த படத்திற்கு உண்டு.

Saturday, April 21, 2007

உன்னாலே உன்னாலே

உன்னாலே உன்னாலே
ஜீவாவின் முந்தைய இரண்டு படங்களான "12B"யும், "உள்ளம் கேட்குமே"யும் அளித்த தைரியத்திலும், ரசிக்க வைத்த பாடல்களில் மயங்கியும் இப்படத்தைப் பார்க்க சென்றேன். ஆனால் இனிமேல் என் வாழ்க்கையில் ஜீவா படமே பார்க்க கூடாது என்ற முடிவை எடுக்க வைத்துவிட்டது படம். சித்திரை மாத வெயில் கொடுமை தாங்க‌முடியாமல் A/c திரையரங்கிற்கு வரும் மக்களை இப்படியா கொடுமைப் படுத்துவது?
காதலர்களுக்கு இடையேயான (வினய் & சதா) மோதலுடன் ஆரம்பிக்கிறது கதை. அதன்பின் வினய் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார். விமானத்தில் தனிஷாவுடன் பழகுகிறார். ஆஸ்திரேலியாவில் இறங்கிய‌தும் தனிஷாவை அழைத்து செல்ல அவருடைய அலுவலக தோழி சதா அங்கே வருகிறார். வினய் சதாவைத் துரத்த, சதாவுக்கு வினய் மேல் ஏற்பட்ட கோபம் இன்னும் குறையாமல் இருக்க, வினய்க்கு உதவ வரும் தனிஷாவுக்கு மெல்ல காதல் வர, இப்படி மூன்று பேரும் சேர்ந்து நம்மைக் குழப்புவது தான் கதை.எவ்வளவு யோசித்தும் படத்தில் எந்த ஒரு விஷ‌யமும் சொல்லும்படியாக‌ இல்லை. படம் முடியும் போது சதா "போதுமா?" என்று சொல்லும் வசனம் மட்டுமே காதில் தேனாகப் பாய்ந்தது. "போதும்டா சாமி" என்று திரையர‌ங்கை விட்டு வெளியே வ‌ந்தேன்.

Sunday, March 25, 2007

மொழி

மொழி

"அழகிய தீயே" படத்தை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் ப்ருத்விராஜ், ப்ரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா நடிப்பில் வெளிவந்துள்ள படம் "மொழி". கதை பெரிதாக ஒன்றுமில்லை. எல்லா தமிழ் படங்களிலும் வருவது போல் நாயகன் நாயகியைப் பார்த்தவுடன் விளக்கு எரிகிறது, மணி அடிக்கிறது, காதலும் பொங்குகிறது. நாயகியை மணம் செய்துகொள்ள விரும்புகிறார். அனைவரும் சம்மதிக்கிறார்கள், நாயகியைத் தவிர. தான் ஊமையாகப் பிறந்ததால் தன் தாயைவிட்டு விட்டுப் பிரிந்துச் சென்றுவிட்ட தந்தையின் செயலால் நாயகி திருமணத்தைத் தவிர்க்கிறார். நாயகியை சமாதானம் செய்து நாயகன் அவரை மண‌ம் முடிப்பது தான் கதை.

படம் ஆரம்பிக்கும் பொழுது பின்னணி இசை இல்லாமல் சில காட்சிகளை காட்டுகிறார்கள். அதைப் பார்த்தவுடன், இசையின் முக்கியத்துவம் பற்றி மணிக்கண‌க்கில் பேசப்போகிறார்கள் என்ற பயம் நமக்கு வருகிறது. நல்ல வேளையாக அத்தகைய முயற்சி எதையும் இயக்குனர் எடுக்கவில்லை. பின்னர் அதே காட்சிகளுக்கு ப்ருத்விராஜும் ப்ரகாஷ்ராஜும் பின்னணி இசை அமைத்து படத்தில் அறிமுகமாகிறார்கள். நாயகன் அறிமுகத்தை எளிதாக இனிதாக‌ அமைத்த‌ இயக்குனர், நாயகி காது கேளாத, வாய் பேசமுடியாதவர் என்பதை காட்டுவதற்கு வெகு நேரம் எடுத்துக் கொள்கிறார். இயல்பாக காட்சிகள் அமைக்கிறேன் பேர்வழி என்று தேவையில்லாமல் ஜோதிகாவின் பாட்டியை மயக்கமுறச்செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து சொல்கிறார் ஜோதிகா ஊமை என்று. நாயகி ஊமை என்பதை Trailer பார்த்தே தெரிந்துகொண்ட நமக்கு இந்த அறிமுக காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன.படம் முழுக்க இப்படிப் பல காட்சிகளை ஜவ்வாக இழுத்திருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளை நம்மால் முன்னரே யூகிக்கமுடிகிறது.

ஒரு ஞாபக மறதி கதாபாத்திரத்தையும் பக்கத்து வீட்டுக்காரர் கதாபாத்திரத்தையும் நகைச்சுவைக்காக‌ படத்தில் திணித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிரிப்பை வரவைப்பதற்கு பதில் கடுப்பை ஏற்படுத்துகின்றன. ப்ரகாஷ்ராஜ் குடித்துவிட்டு செய்யும் கலாட்டாக்கள், அதனால் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்படும் சண்டை ஆகியவை செயற்கையாக தெரிகின்றன. நாயகனுக்கு சைகை மொழி கற்றுத்தருவதற்காக சொர்ண‌மால்யாவைப் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். இறுதியில் ப்ரகாஷ்ராஜை மணம் முடிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை அவருக்கு. படம் முழுக்க நாயகனுடன் வந்து போகிறார் ப்ரகாஷ்ராஜ். படத்தில் ஒரளவு நடிக்க முயற்சி செய்திருப்பது நாயகி ஜோதிகா மட்டுமே. முகபாவ‌ங்களிலும் கண்ணசைவுகளிலும் தன் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். காது கேளாதோரின் உலகத்தை உணர்வதற்காக நாயகன் காதில் பஞ்சு வைத்து அலைவதும், இசையை உண‌ர்வதற்காக நாயகி ஒலிபெருக்கியில் கைவைத்துப் பார்ப்பதும் நல்ல கற்பனை. சைகை மொழியை அழகாக‌ பயன்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

எந்த வித புதுமையையோ வித்தியாசத்தையோ பயன்படுத்தாமல் அரைத்த மாவையே அரைத்து வெளிவந்துள்ள இப்படம் நன்றாக ஓடுவதன் காரணம், முழுக்க முழுக்க வன்முறையை மையமாக கொண்டு வெளிவரும் மற்ற படங்களாலும், இதை விட மோசமான தொலைக்காட்சி தொடர்களாலும் சலிப்புற்ற மக்களே.

Saturday, March 10, 2007

முருகா


சமீப காலமாக, பல இயக்குனர்கள் படம் நன்றாக இயக்குகிறார்களோ இல்லையோ படத்தின் Trailer மட்டும் மக்களைக் கவரும் படி எடுத்து மக்களைத் திரையரங்கிற்கு வர வைத்துவிடுகிறார்கள். அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 'முருகா'. புதுமுகங்கள் அஷோக், ஸ்ருதிசர்மா நடிப்பில் கார்த்திக் ராஜா இசையில் ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள படம் 'முருகா'.

முருகா
சாதாரண‌ பள்ளி ஆசிரியையின் மகன் முருகன், பள்ளியின் தாளாளர் விநாயக மூர்த்தியின் மகள் அமுதாவை ஒருதலையாக காதலிக்கிறார். அமுதா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதைக் கேள்விப்பட்ட‌ விநாயக மூர்த்தியின் ஆட்கள் முருகனை அடித்துத் துவைக்கிறார்கள். படிப்பை இழந்து ஊரைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்து Courier அலுவலத்தில் வேலை பார்க்கிறார் முருகன். அமுதாவும் மருத்துவம் படிக்க சென்னை வருகிறாள். வந்த இடத்தில் இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். தன்னை விரும்பி, அதனால் வாழ்கையைத் தொலைத்த முருகன் மீது அமுதா காதல் வயப்படுகிறார். ஆனால் அவளது காதலை ஏற்கும் நிலையில் முருகன் இல்லை. இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை.

நல்ல கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் திரைக்கதை சரியாக அமைக்க தவறியிருக்கிறார். தேவையில்லாத கதாபாத்திரங்கள், அடிக்கடி வரும் பாடல்கள், நகைச்சுவை என்ற பெயரில் வடிவேலு செய்யும் அட்டூழ்யங்கள் என படத்தில் பல பின்னடைவுகள். இருவர் ஈரிடம் இரு தருணம் என கவிதைத்துவமாக Trailer காட்டிய இயக்குனர் காட்சி அமைப்பில் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் புதுமையோ வித்தியாசமோ தென்படவில்லை.

புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி அஷோக் நிறைய உழைத்திருக்கிறார். நன்றாக அடி வாங்கியிருக்கிறார். சில இடங்களில் நடித்தும் இருக்கிறார். ஸ்ருதிசர்மா அழகாக இருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தைப் படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். அப்பாலம் வரும் காட்சிகளில் மட்டும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது. மற்றபடி படத்தில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை.